திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த 19 வயதான சதாம் உசேன் என்ற இளைஞருக்கும், 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குமே போதை ஊசிகளைப் பயன்படுத்தும் ஆபத்தான பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களை கணவன்-மனைவி என்று பொய் கூறி, நேற்று முன்தினம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகம்
அறையில் தங்கியிருந்த நிலையில், நேற்று மாலை சதாம் உசேன் திடீரென மிகுந்த பதற்றத்துடன் அறையை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் தனது மனைவி கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து மயக்கமடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுயநினைவின்றி இருந்த அந்தச் சிறுமியை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுமியை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.
விடுதியில் சிக்கிய போதை மாத்திரைகள்
சிறுமியின் மரணம் குறித்துத் தகவல் அறிந்த கன்டோன்மென்ட் காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி அறையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், அறையிலிருந்து ஏராளமான போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சதாம் உசேனைத் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
