சிவகங்கையைச் சேர்ந்த 43 வயதான மாரீசெல்வன் என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா என்ற திருநங்கை மற்றும் அவரது தோழர்களைச் சந்திப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று மாலை 5 மணியளவில் ஆதிராவின் 14 வயது தங்கையைத் தனது காரில் சுற்றிக் காட்டுவதாகக் கூறி மாரீசெல்வன் அழைத்துச் சென்றுள்ளார். ஓட்டுநர் மாரீசெல்வன் தங்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால், அந்தச் சிறுமியுடன் அவரது சகோதரரான மற்றொரு திருநங்கையும் சில திருநங்கைகளும் உடன் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
காரில் நடந்த கொடூரம்
காரில் சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த கும்பல் சிறுமிக்கு மது கலந்த ஜூஸ் வகைகளைக் கொடுத்துக் குடிக்க வைத்துள்ளனர். இதனால் சிறுமிக்கு மெல்ல மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நிலையை உணர்ந்த சிறுமி தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த கும்பல் காரை நிறுத்தாமல் வேறு ஒரு பகுதிக்குச் சென்று, அங்கு மாரீசெல்வனின் நண்பர்களான மேலும் மூன்று இளைஞர்களைக் காரில் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து காரினுள்ளேயே அந்த சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கடுமையாக அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கிய நிலையில் வீசப்பட்ட சிறுமி
கொடூரத் தாக்குதலால் சுயநினைவை இழந்த சிறுமியை, மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் காந்தி மார்க்கெட் பகுதியில் அந்த கும்பல் காரில் இருந்து வீசிவிட்டுத் தப்பியோடியது. போதை மற்றும் காயங்களால் மயங்கிக் கிடந்த சிறுமியைப் பார்த்த பொதுமக்களும் அப்பகுதி போலீசாரும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காகத் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த சிறுமிக்குத் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவசரக் கண்காணிப்பில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொதுமக்கள் தர்மஅடி
இதற்கிடையே, தலைமறைவான கார் ஓட்டுநர் மாரீசெல்வனைத் தேடி வந்த பொதுமக்கள், இரவு 7.30 மணியளவில் அவர் மீண்டும் கல்மந்தை காலனிப் பகுதிக்கு வந்தபோது சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்குச் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்ததில், மாரீசெல்வனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மற்ற மூன்று இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கொடூரத்தை அறிந்து மருத்துவமனையில் திரண்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், சிறுமியைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும் திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
