தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 2) தொடங்கின. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய கல்வித்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சுமார் 49,000 ஆசிரியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, 4,540 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் வசதிக்காகத் தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் மற்றும் போதிய காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 250 மையங்களில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பிரத்யேக வழித்தடங்களும் கண்காணிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற குறியீடுகளையோ அல்லது பெயரையோ குறிப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் அல்லது காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417, 94983 83075, 94983 83076 உள்ளிட்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
