நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி தேர்த்திருவிழாவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
சுவருக்கும் சக்கரத்திற்கும் இடையே சிக்கிய இளைஞர்கள்
நேற்று கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக இரண்டு இளைஞர்கள் தேர் நின்ற இடத்தில் இருந்த சுவற்றுக்கும், தேரின் பெரிய சக்கரத்திற்கும் இடையில் மாட்டி நசுங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி மாணவர் மரணம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவரான ஹர்ஷவர்தன் (20) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான கல்லூரி மாணவர் சஷ்டிகனுக்கு இடுப்பு எலும்பில் பலத்த முறிவு ஏற்பட்டது. அவர் தற்போது கோவை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் முறையில் நடந்த விபரீதம்
இக்கோயிலில் கடந்த 450 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான தேரே வீதியுலா வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அண்மையில் 2.17 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேர் ஒன்று செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அதன் வெள்ளோட்டம் நடைபெற்றது. வெள்ளோட்டம் முடிந்து, புதிய தேர் முதன்முறையாக நேற்றுதான் மக்கள் முன்னிலையில் வீதியுலா வந்தது. புதிய தேரின் முதல் ஓட்டத்திலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் ஆறுதல் மற்றும் முதல்வர் நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த ஹர்ஷவர்த்தனின் குடும்பத்தினரை அமைச்சர்கள் அருண்ராஜ், லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழன் பார்த்திபன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்தனர். இதற்கிடையே, இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் விஜய், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகனுக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
