தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், பிளஸ்-2 மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்த அந்த மாணவி, தற்போது நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக நேற்று இரவு வீட்டில் வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, இன்று காலை வேடநத்தம் காட்டுப் பகுதியில் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முன்னதாக, மாணவி மாயமானது குறித்து இன்று காலை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அங்கிருந்த காவலர்கள் அலட்சியப்படுத்தி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் புகாரைப் பெற மறுத்த நிலையில், உறவினர்களே தேடிச் சென்றபோதுதான் மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் பின்னர் கொலை செய்திருக்கலாம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
