2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தன்னை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒப்புக்கொண்டுள்ளார். இது திமுக, அதிமுக மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இல்லாமல் வென்ற தவெக
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாடினார். அதனைப் பெற்று முதலமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையிலும் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
விஜய்க்கு ஏற்பட்ட சோதனைகள்
இந்த நிலையில் மே 4ம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மே 10ஆம் தேதி தான் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் இழுபறியாக சென்றது. இதற்கிடையில் 59 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவும், 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவும் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியிருந்தது.
திமுக இதற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் எனவும், அக்கட்சி பிரதான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் செயல்படும் எனவும் சொல்லப்பட்டது. முதலில் திமுக அதிமுக கூட்டணி என்ற விஷயத்தை இரு கட்சிகளின் தலைவர்களும் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் மழுப்பலாக பதிலளித்து சென்றனர்.. ஆனால் ஆளுநர் அர்லேகர் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையாக வெடிக்க திமுக இந்த தகவல் வதந்தி என மறுத்தது. ஆனால் அதிமுக தலைவர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என உறுதியாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் முதலமைச்சராக பதவியேற்றார்.
பிரிந்த அதிமுக - பகீர் குற்றச்சாட்டு
இதற்கிடையில் அதிமுகவில் பிரிந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக - திமுக கூட்டணி அமைக்க முடிவு செய்வதை பொதுவெளியில் போட்டுடைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதனை திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கிடையில் திமுக தயவில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமர அதிமுக எம்எல்ஏக்கள் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விஜயை முதலமைச்சராக வரவிடக்கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்த இரு கட்சிகளும் திருமாவளவனை முதலமைச்சராக அமர்த்தலாம் என முடிவு செய்து அது தொடர்பாகவும் கருத்து கேட்டுள்ளனர். ஆனால் இதனை திருமாவளவனும் முதலில் மறுத்தார்.
திமுக - அதிமுக கூட்டணி உண்மைதான்
இந்த நிலையில் தான் நேர்காணல் ஒன்றில் ,திருமாவளவன் தன்னை முதலமைச்சராக திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து அணுகியதை ஒப்புக்கொண்டு உள்ளார். விஜய்க்கு மே 9ம் தேதி மாலை 4 மணிக்கு தான் திருமாவளவன் ஆதரவை தெரிவித்தார். அதற்கும் சற்று முன்பு வரை தொடர்ச்சியாக எந்த தரப்பு எனக் குறிப்பிடாமல் சிலர் தன்னை அணுகி முதலமைச்சராக உங்களை வழிமொழிகிறோம் என தெரிவித்தார்கள். ஆனால் நான் இதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது எனக் கூறி அதனை மறுத்து விட்டேன். அதே சமயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அமர ஆதரவு கொடுப்பது பற்றி கருத்து கேட்டார். அதற்கு அப்படி செய்தால் திமுகவின் எதிர்காலம் பாழாகிவிடும் என நான் தெரிவித்தேன். இந்த விஷயத்துக்கு கூட்டணி கட்சிகள் மறுப்பு தெரிவித்தன எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விஜய்க்கு முட்டுக்கட்டையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த கருத்து திமுக கூட்டணியில் பிளவையும் உண்டாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. திருமாவின் பேச்சு திமுக, அதிமுக மீதான மக்களின் மதிப்பை குறைக்க தொடங்கியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
