தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதி மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களான ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மது விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுபானங்களை உற்பத்தி செய்வதும், வாகனங்களில் கடத்திச் செல்வதும் சட்டப்படி குற்றம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கட்டுப்பாடு
தமிழக எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மதுவிலக்கு நாட்களை அமல்படுத்த அம்மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத் தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும், எல்லையோர மதுக் கடத்தலைத் தவிர்க்கவும் ஏப்ரல் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
