தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு இடையே, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பரவலாகவும், ஏப்ரல் 7 முதல் கடலோர மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
