இஸ்லாமிய நாட்காட்டியின் புனிதமான ஒன்பதாவது மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, அதன் நிறைவாக ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நிலவின் அடிப்படையில் கணக்கிடப்படும் நடப்பாண்டிற்கான ரம்ஜான் நாளை சனிக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இஸ்லாமிய உடன்பிறப்புகளுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், நபிகள் நாயகத்தின் நெறியில் வாழும் அவர்களுக்குத் திமுக அரசு என்றும் அரணாகத் திகழும் எனக் குறிப்பிட்டுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினருக்கான சமூக நீதியைத் தனது அரசு நிலைநாட்டி வருவதாகவும், மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமின்றிச் செயல்படுவதால் தமிழ்நாடு இன்றும் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மேன்மையான மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து ஈகையின் சிறப்பினை உணர்த்தும் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் போதித்த அன்பு, கருணை மற்றும் சினம் தவிர்ப்பு போன்ற உயரிய குணங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து, உலகில் அமைதி தழைக்க அனைவரும் உறுதியேற்போம் என்று அவர் தனது செய்தியில் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நன்மை மற்றும் தீமைகளைப் பிரித்தறியும் நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், இஸ்லாமிய வரலாற்றின் பல முக்கிய வெற்றிகள் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். காய்ந்த குடல்களும் பசியின் அகோரமும் வறியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பாடத்தை நமக்கு உணர்த்துவதாகவும், ஏழை எளியோருக்கு 'ஜக்காத்' வழங்கி மகிழும் அனைவருக்கும் தனது வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
மனித வாழ்க்கையில் அகமும் புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிட்ட அவர், நன்மைகள் மட்டுமே மனிதத்தை உயர்த்தும் என்ற தத்துவத்தை ரம்ஜான் உணர்த்துவதாகக் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய தீமையான மது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், உலகில் அன்பு மற்றும் சகிப்புத்தன்மை பெருக இந்த புனித நாளில் உறுதியேற்போம் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்
நேர்மையான வாழ்க்கை வாழும் இஸ்லாமியர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பாராட்டியுள்ளார். மகிழ்ச்சி, சகோதரத்துவம் மற்றும் தானம் நிறைந்த இந்த ரம்ஜான் பண்டிகை, இஸ்லாமியப் பெருமக்களின் இல்லாமை நீங்கி இன்பங்கள் பெருக வழிவகுக்க வேண்டும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர்
விரதம் எனும் நோன்பு அனைத்து மதங்களிலும் பொதுவான ஒரு அம்சம் என்பதை இஸ்லாம் உலகிற்கு உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கிச் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் வளமும் மகிழ்வும் பெருக இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
பசித்தவர்களுக்கு உணவளித்தல் மற்றும் துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருத்தல் போன்ற நபிகளின் போதனைகளைத் தனது செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார். இஸ்லாமியச் சகோதரர்களின் எண்ணங்கள் ஈடேறவும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் நீங்கி உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழவும் இந்த நாளில் வேண்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
ஒழுக்கம் மற்றும் தியாகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதாகப் புகழ்ந்துள்ளார். சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாகவும், ரம்ஜான் பண்டிகை சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா
ரம்ஜான் என்பது மனிதர்களைப் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாள் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்த அவர், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சமூகத்தில் மாற்றம் ஏற்படவும் இந்த ஈத் பெருநாளில் சபதம் ஏற்போம் என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய லீக் தலைவர் நாகூர் ராஜா
இன மற்றும் ஜாதித் திமிர்களை மிதித்துச் சமத்துவத்தை நிலைநாட்டியவர் நபிகள் நாயகம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அண்டை வீட்டார் பசியோடு இருக்கும்போது நாம் மட்டும் உண்ணக்கூடாது என்ற உன்னத லட்சியத்தை உலகிற்குப் போதித்த இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தனது உளங்கனிந்த வாழ்த்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.
