இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முக்கிய தேசிய நுழைவுத் தேர்வாக நீட் யூஜி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், தேர்வு நடைபெறும் முன்பே சில பகுதிகளில் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற விசாரணையில் வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிய நிலையில், தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “நீட் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. நீட் அறிமுகமான காலத்திலிருந்தே தமிழக அரசு ஒருமித்த குரலில் இந்த தேர்வை எதிர்த்து வருகிறது” என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை சுற்றியுள்ள சர்ச்சை காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது
