தமிழக அமைச்சரவை இன்று புதிய மாற்றங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் முறைப்படி செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய அமைச்சர்களின் துறை மாற்றங்கள்
முந்தைய அமைச்சரவையில் நிதித்துறையைக் கவனித்து வந்த கே.ஏ.செங்கோட்டையனின் துறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கோட்டையன் வசம் இருந்த முக்கியத்துவமிக்க நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை ஆகியவை புதிய அமைச்சர் மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்
அமைச்சரவையில் இணைந்த பிற அமைச்சர்களுக்கான துறைகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநாத் மீன்வளத் துறை அமைச்சராகவும், எஸ்.கமலி கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பால்வளத்துறையை சி.விஜயலக்ஷ்மி கவனிக்க, ஆர்.வி.ரஞ்ஜித்குமாருக்கு வனத்துறையும், வினோத்திற்கு வேளாண் துறையும் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றத் துறைகள் ராஜீவ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பி.ராஜ்குமாருக்கும், கூட்டுறவுத் துறை வி.காந்திராஜுக்கும், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மதன்ராஜ்.பி-க்கும் வழங்கப்பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை ஜெகதீஸ்வரி.கே-விடமும், சுற்றுலா துறை ராஜேஷ்குமார்.எஸ்-விடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெசவு மற்றும் கைத்தறித் துறையை எம்.விஜய் பாலாஜியும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை லோகேஷ் தமிழ்ச்செல்வனும், போக்குவரத்துத் துறையை விஜய் தமிழன் பார்த்திபனும் வழிநடத்தவுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை ரமேஷுக்கும், உயர்க் கல்வித் துறை பெ.விசுவநாதனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய சேவை துறை குமார்.ஆர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தென்னரசு.கே அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும், வி.சம்பத் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், முகமது ஃபர்வாஸ் தொழிலாளர் நலன் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை டி.சம்பத் குமாருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை விக்னேஷ்.கே-விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நியமிக்கப்பட்ட 9 அமைச்சர்களின் துறைகள்
கடந்த 16ஆம் தேதியே 9 அமைச்சர்களுக்கான துறைகள் இறுதி செய்யப்பட்டிருந்தன. அதன்படி, அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன் சுமை உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறையையும், அமைச்சர் அருண் ராஜ் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறையையும் கவனிப்பார்கள்.
உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் அமைச்சர் வெங்கட் ரமணனுக்கும், மின்சாரம், சட்டத் துறை, மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சிறைகள், ஊழல் தடுப்பு மற்றும் தேர்தல்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தொல்லியல், தகவல் மற்றும் விளம்பரம், அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகளும், அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையும், அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய விரிவாக்கத்தின் மூலம் தமிழக அமைச்சரவையின் மொத்த பலம் 33 ஆக உயர்ந்துள்ளது.
