தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று உற்சாகத்துடன் தொடங்கியது. நேற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், இன்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். முன்னதாக, சோழவந்தான் தொகுதி உறுப்பினர் எம்.வி.கருப்பையாவைத் தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கும் கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 9.30 மணிக்கு தற்காலிக சபாநாயகர் தலைமையில் கூட்டம் தொடங்கியதும், அவரது உரைக்குப் பின் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரசியல் பரபரப்புகள்
இந்த முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க தவெக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்தனர். முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவைப் போலவே இன்றும் கம்பீரமான கோட்-சூட் அணிந்து அவைக்கு வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதற்கிடையே, அதிமுக உறுப்பினர்கள் இரு அணிகளாகப் பிரிந்து வந்திருந்தது சபையில் பேசுபொருளானது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவும் தனித்தனியாகச் சட்டமன்றத்திற்கு வந்தனர். சபைக்குள் நுழைந்த போது இவ்விரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் முகம்கொடுத்துப் பேசிக் கொள்ளாமல் தவிர்த்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
