திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்துள்ள கல்லம்பேடு மற்றும் பூவனூர் கிராமங்களில் நேற்று ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நாய்கள் குறிவைத்துத் தாக்கின.
அலட்சியம் காட்டும் அதிகாரிகள் - பொதுமக்கள் புகார்
கல்லம்பேடு மற்றும் பூவனூர் கிராமங்களில் நாய்கள் தொல்லை குறித்து கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கே, தற்போது 9 பேர் பாதிக்கப்பட முக்கியக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாய் கடியால் காயமடைந்த அனைவரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் வீடு திரும்பினர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை
இந்தத் தொடர் நாய் கடி சம்பவத்தால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கல்லம்பேடு மற்றும் பூவனூர் பகுதிகளில் அச்சுறுத்தலாகத் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை அப்புறப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
