ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "பா.ஜ.க. அரசு தனது இந்தித் திணிப்பு வெறியில் வரம்பு மீறிச் சென்று கொண்டிருக்கிறது. 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' என்ற விசித்திரமான முறையைப் பின்பற்றி, இந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் கீழ்த்தரமான செயலில் இறங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
வாசல் நுழையாப் பெயர்கள்: முதலமைச்சரின் கண்டனம்
நுழைவு வாயிலிலேயே நாக்கு நுழையாத இந்திப் பெயர்களைத் திணிப்பதன் மூலம் தமிழின் அடையாளத்தைச் சிதைக்க முயற்சிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். #HindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, மொழிப் பற்று மிக்க மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. மாநில மொழிகளை மதிக்காமல், இந்தியை மட்டும் அனைத்து இடங்களிலும் முன்னிறுத்தும் ஒன்றிய அரசின் இத்தகைய 'இழிவான' போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தனது கண்டனத்தை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது X தளத்தில்,
- திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்து உள்ளனர்.
- வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
- குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
- ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
- மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
- கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம் பெற வேண்டும். இல்லை என்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.