காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் கார்களுக்கான கேபிள் தயாரிப்பில் ஈடுபடும் 'டிஎஸ்' (TS) என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு நேற்று மதிய உணவாகச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்குக் கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
இந்த விபரீதம் குறித்துத் தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உடனடியாக தொழிற்சாலைக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர். அதில், 'தன்ஸ்ரீ' என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் சமைத்து விநியோகித்த பிரியாணியில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்பட்டதே இந்த ஒட்டுமொத்த பாதிப்பிற்கும் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்தது. சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உணவின் தரத்தில் சமரசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய மருத்துவ நிலை
பாதிப்புக்குள்ளானவர்களில் மொத்தம் 97 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் உடல்நிலை தேறிய 84 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 13 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை மோசமாக இருந்த இரு பெண்கள் மட்டும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
