மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமுல்லைவாசலில் இயங்கி வரும் A.R. சாதிக் தீனியாத் பெண்கள் மதரஸாவின் இரண்டாம் ஆண்டு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டத்திலேயே முதன்முறையாக "ஸ்மார்ட் மதரஸா" எனும் நவீன கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ARS குடும்பத்தின் சார்பில், மேலமுஹல்லம் மற்றும் கீழமுஹல்லம் ஜமாஅத் கமிட்டிகளின் ஒத்துழைப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நவீன கல்வித் திட்டமானது இஸ்லாமிய வாழ்வியல் கல்வியுடன் கணினி அறிவு, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, தையல் கலை மற்றும் இணையவழி அரபி கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
விழாவிற்கு மேலமுஹல்லம் முத்தவல்லி எச்.எம். அமீன் தலைமை தாங்கினார். நிர்வாகி ஒய். சின்னசாஹிபு வரவேற்புரை ஆற்றினார். ARS குடும்பத்தைச் சேர்ந்த இஸாத் அலி தலைமையில் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சிங்கப்பூரைச் சேர்ந்த Moonlight Studios நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி கே. ரியாசுதீன், ஸ்மார்ட் மதரஸா திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கினார். குறிப்பாக, முபல்லிகா பட்டம் பெறும் மாணவியருக்கு மடிக்கணினி வழங்குதல், மாதம் 10 ஹதீஸ்களை மனப்பாடம் செய்தல் மற்றும் டிஜிட்டல் சாதனைகள் புரியும் மாணவியருக்கு மடிக்கணினி, தொடுதிரை கணினி உள்ளிட்ட பரிசுகளை வழங்குதல் போன்ற சிறப்பம்சங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் யூனிஸ் கல்வி நிறுவன செயலாளர் மௌலானா எம். முஹம்மது ஹக்கீம் சுல்தான் காஷிஃபி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து பேசினார். ஆய்வாளர் ஏ.ஆர். பஜ்லுத்தீன் காஷிஃபி நவீன துணைக் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார். சிறப்புப் பேச்சாளர் பாத்திமா சபரிமாலா ஹிஜாப் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். சிங்கப்பூரிலிருந்து Moonlight Studios பிரதிநிதிகள் முஹம்மது ஆரிஃப், அப்துல் அஜீஸ் மற்றும் அபு தாலிஃப் ஆகியோர் விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மதரஸா மாணவிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் தையல் மற்றும் கணினி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு சிங்கப்பூர் ARS டிஜிட்டல் வேர்ல்ட் சார்பில் அலைபேசிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், அனைத்து மாணவிகளுக்கும் கஃபத்துல்லா வடிவிலான திருக்குர்ஆன் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் நிறைவாக சுமார் 3,000 பேருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
