திரையுலகில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஸ்வாகதா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், தான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த மிகக் கொடுமையான அனுபவத்தைப் பற்றி கண்ணீருடன் விவரித்துள்ளார்.
எப்ஸ்டீன் ஆஃப் மெட்ராஸ்
நேர்காணலில் பேசிய ஸ்வாகதா, சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரை "மெட்ராஸின் எப்ஸ்டீன்" என்று சாடினார். அந்த இசையமைப்பாளர் ஒரு தொடர் குற்றவாளி என்றும், தன்னைப் போலப் பல பெண்கள் அவரிடம் சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோவில் நடந்த கொடூரம்
அந்த இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் நடந்த அத்துமீறல்களை ஸ்வாகதா தெரிவித்தார். அந்த ஸ்டுடியோ சவுண்ட் புரூஃப் (Soundproof) செய்யப்பட்டது. அங்கிருந்து கத்தினால் கூட வெளியே கேட்காது. அங்கே அவர் என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். அந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு நடக்கும் அனைத்தையும் அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோ பதிவுகளைக் காட்டி, தன்னை மிரட்டியதாகவும், இதனால் மனரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் ஸ்வாகதா தெரிவித்தார்.
நம்பிக்கைத் துரோகம் மற்றும் பண மோசடி
அந்த இசையமைப்பாளர் முதலில் ஒரு வழிகாட்டி போலப் பழகி நம்பிக்கையைப் பெற்றதாகவும், பின்னர் மெல்ல மெல்லத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் தன்னிடமிருந்து பெருமளவு பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும், தொழில் ரீதியாகத் தனது வளர்ச்சியைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
சென்னையை விட்டு வெளியேறியக் காரணம்
இந்தத் தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே, தான் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷிற்குச் சென்றதாக அவர் கூறினார். அவர் தொட்ட இடங்கள் எல்லாம் என் உடலில் இருக்கவே கூடாது என்று தோன்றியது. அந்த நினைவுகளில் இருந்து மீள நான் பல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது" என்று ஸ்வாகதா உருக்கமாகப் பேசினார்.
யார் அந்த இசையமைப்பாளர்?
ஸ்வாகதா அந்த இசையமைப்பாளரின் பெயரை நேர்காணலில் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அவர் சில குறிப்புகளை வழங்கியுள்ளார். அவர் 2010 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். ஆரம்பத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான பல விருதுகளைப் பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவராகவும் இருக்கிறார் எனத் பல ஹிண்ட்களை கொடுத்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இதுவரை பயத்தின் காரணமாகப் புகார் அளிக்காத ஸ்வாகதா, இப்போது சட்டப்பூர்வமாகப் போராடத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார். தன்னைத் தொடர்பு கொண்ட மற்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் ஒருங்கிணைத்து, அந்த இசையமைப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மீண்டும் Me Too?
ஸ்வாகதாவின் இந்தப் புகார் கோலிவுட் வட்டாரத்தில் Me Too இயக்கத்தின் இரண்டாவது அலை போலப் பார்க்கப்படுகிறது. அந்த இசையமைப்பாளர் யார் என்பது குறித்த யூகங்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், விரைவில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
