திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு விசாரணையை தொடங்க அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது செந்தில் பாலாஜி தரப்புக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
பணமோசடி வழக்கு
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அம்மா குடிநீர், அம்மா சிற்றுந்து என பல திட்டங்கள் மூலம் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்ற செந்தில் பாலாஜி அந்த பதவி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதற்காக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் 2015 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் அதனை 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கிடையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
அதில் 2021 ஆம் ஆண்டு அவர் சார்ந்த திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.
அதிகாரத்தில் இருந்தாலும் கைது
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனு அளித்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாதத்திற்குள் வழக்குகளை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் தான் 2023 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது. கிட்டதட்ட 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடுமையான நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
அமைச்சர் பதவியில் ராஜினாமா
அதன் பிறகு மீண்டும் திமுக அரசின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். ஆனால் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றது தொடர்பாக அதிருப்தியை தெரிவித்ததால் 2025 ஏப்ரல் மாதத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கின் விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில் அப்போதைய திமுக அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. இதுதொடர்பான கடிதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமலாக்கத்துறை அனுப்பியது. ஆனால் ஒரு அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி வழங்குவதில் மாநில அரசே தகுதியான அதிகாரம் கொண்டது எனவும், அந்த கடிதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் திமுக அரசு தெரிவித்தது.
மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சராக ஜோசப் விஜய் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். இதனிடையே தற்போது தகுந்த ஆதாரங்களுடன் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை சார்பில் புதிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மேல் விஜய் என்ன மாதிரியான முடிவெடுக்கப்போகிறார் என்பது கேள்வியாக மாறியுள்ளது.
ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் இதற்கு செந்தில் பாலாஜி தரப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கரூர் விவகாரத்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வரும் போது சரியான நியாயமான அரசை வழிநடத்துவேன் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நல்ல முடிவெடுத்து தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாடமாக இருக்க உரிய நடவடிக்கைகளை விஜய் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
