சவுக்கு மீடியா சிஇஓ-வும் பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்பட்ட இரு மோசடி வழக்குகளில், கடந்த 2025 டிசம்பர் 13-ம் தேதி ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். முன்னதாக, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், அந்தத் தேதியில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். கடந்த வாரம் ஆந்திராவில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தாயார் மறைவும் பரோல் அனுமதியும்
இந்த இக்கட்டான சூழலில், உடல்நலக்குறைவு காரணமாக சவுக்கு சங்கரின் தாயார் கமலா கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் மின் மயானத்தில் நடைபெற்ற தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சவுக்கு சங்கர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதனை ஏற்று, ஏப்ரல் 13 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 16 இரவு 8 மணி வரை அவருக்குப் பரோல் வழங்கி சிறைத்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கண்ணீருடன் பங்கேற்றார்.
அரசியல் தலைவர்களின் இரங்கல்
சவுக்கு சங்கரின் தாயார் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், திமுக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துப் பேசியதற்காகச் சவுக்கு சங்கர் சந்தித்த துயரங்கள் ஏராளம் என்றும், தாயை இழந்து வாடும் அவருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், இந்த கடினமான நேரத்தில் சவுக்கு சங்கரின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் சவுக்கு சங்கரின் தாயார் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த மனத்துயரையும், இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.
