தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ஆம் ஆண்டு காவல்துறை விசாரணையின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியச் சாட்சியங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். சுமார் ஆறு ஆண்டுகளாக மிக விரிவாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முத்துக்குமார், மார்ச் 23-ஆம் தேதியன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து உத்தரவிட்டிருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் எனப் பலமுறை மனுத் தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (மார்ச் 30, திங்கள்கிழமை) பிற்பகலில் வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், இரவில் உரிய நேரத்தில் செல்போன் கடையை மூடுமாறு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரையும் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் போலீசாரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உலக அளவில் கவனத்தைப் பெற்றது. இந்தச் சூழலில், ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
