தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்களை வெளியிடுவதை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விதிமுறைகளை மீறியதாகக் கூறி போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. பின்னர் சிபிசிஐடி மற்றும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில், 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு 2,400-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுமார் ஆறு ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரும் குற்றவாளிகள் என மார்ச் 23-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஒரு காவலர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால், மீதமுள்ள 9 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று (மார்ச் 30) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதைக் காரணம் காட்டி அரசு தரப்பு கால அவகாசம் கோரிய நிலையில், இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே தண்டனையின் தன்மையைத் தீர்மானிக்க முடியும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்குள் கட்டாயமாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அன்றைய தினமே தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
