தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு மார்ச் மாத உதவித்தொகையுடன் கூடுதலாக 2,000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது முதியோர், கைம்பெண்கள் மற்றும் திருநங்கையர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கப்படும் 1,200 ரூபாயுடன் இந்தச் சிறப்பு நிதியும் சேர்ந்து, மொத்தம் 3,200 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர் மற்றும் கைம்பெண்கள் தலா 3,200 ரூபாயைப் பெற்றுள்ளனர். அதேபோல், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும், தீவிர பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பராமரிப்புத் தொகையுடன் சேர்த்து தலா 4,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மீன்பிடித் தடை காலத்தை முன்னிட்டு 1 லட்சத்து 62 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு தலா 8,000 ரூபாயும், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான ஆதார விலையாக 8.53 கோடி ரூபாயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், நலிவுற்ற மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தச் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்கிற இலக்கோடு அரசு செயல்பட்டு வருவதாகவும், கோடைக்காலச் சுமையை குறைக்கும் வகையில் இந்த நிதி உதவிகள் பொதுமக்களுக்குப் பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
