Rickey Radhan Pandit | 3 முறை திருமணம்.. கொடிகட்டி பறந்த ஜோதிடம் பிசினஸ்.. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பின்னணி இதுவா?

விஜய் நிச்சயம் இந்த தேர்தலில் ஜெயித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என பண்டிட் வெற்றிவேல் கணித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்தம் பண்டிட் மீது பல்வேறு குற்றங்களும் சுமத்தப்பட்டு வருகிறது.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Rickey Radhan Pandit | 3 முறை திருமணம்.. கொடிகட்டி பறந்த ஜோதிடம் பிசினஸ்.. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பின்னணி இதுவா?

தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டு ஒரே நாளில் அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஜோதிடர் ஒருவர் எப்படி அரசின் உயர் பொறுப்புக்கு வர முடியும் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைக்க அதனை ஏற்று முதலமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனம் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

விஜயின் ஆஸ்தான ஜோதிடராக திகழும் இந்த வெற்றிவேல் எப்படி செல்வாக்கு மிக்க நபராக திகழ்கிறார் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். ஆனால் பல வருட காலமாக தமிழ்நாடு அரசியலுக்கும் அவருக்கும் மிக நீண்ட நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள அவல்பூந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் ஜோதிடம் பார்த்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கணித்த சில விஷயங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார். ஏற்கனவே தனது முதல் ஆட்சியில் நடந்த வழக்குகளால் சோர்ந்து போயிருந்த ஜெயலலிதாவுக்கு வெற்றிவேலின் கணிப்புகள் சற்று நம்பிக்கையை கொடுத்தது.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஜோதிடர்களில் ஒருவராக வெற்றிவேல் திகழ்ந்தார். தேர்தலில் கூட்டணி ஒப்பந்தம், எம்எல்ஏக்கள் தேர்வு, அமைச்சரவை பட்டியல் எண்ணிக்கை என பல விஷயங்களிலும் வெற்றிவேலின் தலையீடு இருக்கும். நினைத்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் போனில் பேசக்கூடிய அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என வெற்றிவேல் கணித்தது அப்படியே நடக்க ஜெயலலிதாவுக்கு அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. இந்த நிலையில் தான் நாட்கள் செல்லச் செல்ல வெற்றிவேல் மீது புகார்கள் போயஸ் கார்டனுக்குள் எழுந்தது.

டெல்லி இடமாற்றம் - பெயரையும் மாற்றிய வெற்றிவேல்

இதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சசிகலா தரப்பு மீது வெற்றிவேல் திடுக்கிடும் புகாரை முன்வைத்தார். அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றுவிடுகிறது. 2007 ஆம் ஆண்டு வெற்றிவேலுக்கு சொந்தமான சென்னை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அதிமுக ஆட்சியை பயன்படுத்தி வெற்றிவேல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததை சசிகலா தரப்பு ரசிக்கவில்லை. மாறாக அதனை அபகரிக்க நினைப்பதாகவும் தன்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்ந்த வெற்றிவேல் தனது பெயரை ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என மாற்றிக் கொண்டார். ஏற்கனவே அரசியலில் கிடைத்த தொடர்பை கொண்டு பாஜக மூத்த தலைவர்களுக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்துள்ளார் பின்னர் சிங்கப்பூரிலும் தனது தொழிலில் விரிவாக்கம் செய்துள்ளார். அங்கு தொழிலதிபர்களின் பழக்கம் கிடைத்ததால் வெற்றிவேலுக்கு வருமானம் கொட்டியுள்ளது.

இந்த நிலையில் தான் மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பிய இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் நெருக்கமாகியுள்ளார். அக்கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் மாறினார். விஜய் நிச்சயம் இந்த தேர்தலில் ஜெயித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என பண்டிட் வெற்றிவேல் கணித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் தான் அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்தம் பண்டிட் மீது பல்வேறு குற்றங்களும் சுமத்தப்பட்டு வருகிறது.

3 முறை திருமணம் - முதல் மனைவி தற்கொலை

அதன்படி வெற்றிவேலுக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்று உள்ளது. அவரது இரண்டாவது மனைவி சுமதி ஸ்ரீ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகங்களில் அளித்த நேர்காணல் வைரலாகியுள்ளது. அதாவது வெற்றிவேலுடன் தான் ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தியதாகவும், அவருக்கு பெண்கள் மீது ஒரு மோகம் இருப்பதாகவும், தனக்கு பிடித்த பெண்ணுக்காக எதையும் செய்யக் கூடியவர் எனவும் அதில் தெரிவித்துள்ளார். வெற்றிவேலுக்கு முதலில் ஆனந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஆனந்தியின் தங்கை ராஜலட்சுமியுடன் தகாத உறவு ஏற்பட்ட நிலையில் குடும்பத்தில் பிரச்சினை வெடித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது மனைவி சுமதி ஸ்ரீயின் நகைகளை அடமானம் வைத்து தான் பார்த்து வந்த பிரின்டிங் பிரஸ் தொழிலை விரிவுப்படுத்திய வெற்றிவேல் சைடு பிசினஸாக ஜோதிடமும் பார்க்க அதில் சில நிகழ்வுகள் பலித்து போயுள்ளது. இதனால் அவரை தேடி மக்கள் வருகை தர பணம் கொட்ட தொடங்கியது. இதனை அறிந்து கொண்ட ராஜலட்சுமி தன் கணவர் மட்டும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இவருடன் வந்து சேர்ந்து விட்டார்.

தான் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என சொல்லி பலரிடம் வெற்றிவேல் பணம் கறந்துள்ளார். பின்னர் ராஜலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். சுமதி ஸ்ரீ அவரது வீட்டை கண்டுபிடித்து ஒரு நாள் சென்ற நிலையில் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளார் ஜோதிடர் வெற்றிவேல். பின் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்ப்பு வெற்றிவேலுக்கு சாதகமாக வந்துவிட்டது. ஆனால் சுமதி ஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டுக்கு வெற்றிவேல் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த பேட்டி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இப்படிப்பட்ட பின்னணி இருப்பவர்களுக்கு எப்படி அரசு பதவி வழங்க முடியும் என எதிர்க்கட்சிகள் எகிறியதால் தமிழ்நாடு அரசு தன் முடிவின் பின்வாங்கியிருக்கிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...