உலகப்புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளாக இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உன்னதமான திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் அதிரடி தணிக்கையில் இறங்கியது. கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் கணக்கில் காட்டப்படாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடை நீக்கம் மற்றும் பணிநீக்க நடவடிக்கை
இந்த மெகா மோசடி விவகாரத்தில் தொடர்புடைய கோவில் ஊழியர்கள் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. பிரசாதப் பிரிவில் பணியாற்றிய பேஸ்கார் பஞ்சமூர்த்தி மற்றும் பணியாளர்கள் விக்ரம், சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா ஆகிய 6 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Sustension) செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றிய பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய மூவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். அரசு அனுமதித்த ஒரு புனிதமான திட்டத்தில், நிர்வாகத்தின் கண்காணிப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி ஊழியர்களே இவ்வளவு பெரிய தொகையைச் சுருட்டியிருப்பது கோவில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கண்காணிப்பை வலுப்படுத்தப் பக்தர்கள் கோரிக்கை
பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்மிகத் தலங்களில் நடைபெறும் நிதி மற்றும் பிரசாத விநியோகங்களை அரசு டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் இருக்கக் கடுமையான கணக்காய்வு முறைகளைக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் நடைபெற்ற இந்த நிதி முறைகேடு, ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
