தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை இதுவரை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சந்திக்காதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் 10 பேருக்கும் மட்டும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விரைவில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் முதலமைச்சர் விஜய் கடந்த மே 14ம் தேதி முதல் வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரை தினம்தோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்து தங்கள் வாழ்த்துகளையும் துறை சார்ந்த கோரிக்கைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக உள்ள பிரியா ராஜன் இதுவரை மரியாதை நிமித்தமாக கூட முதலமைச்சரை சந்திக்கவில்லை. புதிய அரசோடு இணைந்து சென்னையின் வளர்ச்சிக்காக செயல்படுவது மேயரின் பொறுப்பு என்றிருக்கும் நிலையில் அவர் சந்திக்காதது சமூக வலைத்தளங்களில் பல கேள்வியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியைத் தாண்டி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவருக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேயர் பிரியா ராஜன் முதலமைச்சரை சந்திக்காததற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகிறது. அவர் முதல்வர் விஜய் பதவியேற்பு விழா மற்றும் தலைமைச்செயலகத்தில் அலுவல் பணிகள் மேற்கொள்ளும்போது கூட சந்திக்க செல்லவில்லை. சென்னை மாநகராட்சியின் முதலாவது தலித் பெண் மேயர், இளம் வயது மேயர் என்ற பெருமையோடு கடந்த 2022ம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார். அமைச்சர் சேகர்பாபுவின் வலதுகரமாக செயல்பட்ட மேயர் பிரியா ராஜன் மீது சரமாரியாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் தொடங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு என்னவென்று கூட கேட்காதது வரை மக்களிடையெ பிரியா மீது அதிருப்தி எழுந்திருந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட பிரியா முதல்வர் விஜயை சந்திக்காததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா 2001ல் முதலமைச்சராக இருந்தபோது அந்த நிகழ்ச்சியில் மேயராக மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் அந்த பண்பு கூட பிரியாவுக்கு இல்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அலுவலகத்திற்கும் வராத மேயர், எந்த பணிகளிலும் இதுவரை கவனம் செலுத்தாமல் உள்ளார். தேர்தல் தோல்வி அவரை சந்திக்காமல் விடாமல் தடுக்கலாம் என்றாலும், இது தவிர்க்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. முதலமைச்சரை சந்திப்பதற்கான சூழல் வரவில்லை என பிரியா ராஜன் பக்கத்தில் விதவிதமான காரணம் சொல்லப்பட்டாலும் கடமை என வரும்போது கட்சியை பின்னுக்கு தான் வைக்க வேண்டும். மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும் என இணையவாசிகள் அட்வைஸ் செய்துள்ளனர்.
