தவெகவை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என சொன்ன திருமாவளவன் இன்று அதே கூட்டணியில் இருப்பதை பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தேர்தலுக்கு முன் பின் என அரசியல் களம் மாற்றம் கண்டுள்ளது. அதாவது விஜயின் தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட்,, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தது. இதில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற 3 கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது.
தேர்தலுக்கு முன் தவெகவை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக சாடினார். அக்கட்சி ஆர்.எஸ்.எஸ் பெற்ற பிள்ளை என கடுமையாக விமர்சித்தார். இப்போது அதே கூட்டணியில் அக்கட்சி இடம் பெற்றுள்ளதை மற்ற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், "ஆர்.எஸ்.எஸ் பேர பிள்ளையாக மாறிய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். குதிரை பேரம் என்ற வார்த்தையை சொல்கிறார்கள். நான் சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து ஒன்று சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வாக்களித்த இளைஞர்கள், தாய்மார்கள், மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்கள் ஆகியோரை ஏமாற்றக்கூடிய வகையில் எம்.எல்.ஏ.,க்களை குதிரைகளாக அல்லாமல் கழுதைகளாக விலை பேசி கொண்டிருக்கிறார்கள்.
இதைவிட கேவலமான நிலைமை தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை வந்தது இல்லை என்பது இன்றைய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்வது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒன்றை இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுச்சியோடு கூடிய வாக்களிப்பை நடத்திய மக்கள் அதோடு முடிந்து போனது என கருத மாட்டார்கள்.
தாங்கள் எதிர்பார்த்த அரசு இல்லை என நினைத்தால் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். இதனை ஒரு எச்சரிக்கை மணியாக முதலமைச்சர் விஜய் உணர வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
