சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகர் பாண்டி ரவி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவர் தவெக-வில் இணையும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
யார் இந்த பாண்டி ரவி?
வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பாண்டி ரவி, விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானார். சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், சில காலமாகவே தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
பாஜகவிலிருந்து விலகி தவெக-வில் ஐக்கியம்
கடந்த சில காலமாக பாண்டி ரவி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பாஜாகவின் உறுப்பினர் பதவியில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் முற்றிலும் விலகுவதாக அறிவித்த அவர், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாலும், தலைவர் விஜய்யின் அரசியல் தொலைநோக்கு பார்வையாலும் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த இணைவு நிகழ்ந்துள்ளது.
வைரலாகும் வீடியோவும் அரசியல் முக்கியத்துவமும்
பாண்டி ரவி தவெக கட்சியில் இணையும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த, அதுவும் மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயமுள்ள ஒரு கலைஞர் தவெக-வில் இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
