விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சித்தாந்தங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும், ஒடுக்கப்பட்டோரை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியதிலும் விசிக தலைவர் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சாதி மற்றும் மதவெறி சக்திகளைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியலிலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்று தான் முழுமையாக நம்பியதாகவும், ஆனால் தற்போது அந்த அடிப்படை அரசியல் அறம் தடம்மாறுவதை மவுனமாக கடந்து செல்ல முடியாமல், மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுமாறும் தலைமை
சமீபகாலமாக விசிக தலைமையின் செயல்பாடுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் தனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிப்பதாக பனையூர் பாபு விமர்சித்துள்ளார். தெளிவான கொள்கை இல்லாமல், நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் வேறு பேச்சு, நாளை செய்தியாளர் சந்திப்பில் ஒரு கருத்து, இரவில் சமூக வலைத்தள நேரலையில் அதற்கு முற்றிலும் முரணான ஒரு விளக்கம் எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகத் தலைமை செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் களத்திலும், கட்சியின் தொண்டர்களிடையேயும் மிகப் பெரிய குழப்பத்தை உருவாக்குவதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முரண்பாடுகளின் உச்சம்
நேற்று வரை ஒரு குறிப்பிட்ட நடிகரை 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை' என்று மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போன்ற நிலைப்பாட்டை திருமாவளவன் எடுப்பதாக பனையூர் பாபு சாடியுள்ளார். இது அவர் இதுவரை காத்துவந்த கொள்கைகளில் தடம்மாறத் தயாராகிவிட்டதை அப்பட்டமாகக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். திரையரங்கிற்குச் சென்று விசில் அடிப்பவர்கள் எல்லாம் சட்டமன்றத்திற்கு வரக் கூடாது என்றும், அவர்கள் பெரியார், அம்பேத்கர் அரசியலை வீழ்த்த வந்தவர்கள் என்றும் சூளுரைத்த திருமாவளவன், இன்று அவர்களுடனேயே கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சம் என்று அவர் சாடியுள்ளார்.
தொடரும் கொள்கைப் பயணம்
ஆட்சி அதிகாரங்கள் தற்காலிகமானவை என்றும், பெரியாரும் அம்பேத்கரும் வகுத்துத் தந்த கொள்கைகளே நிலையான ஆயுதங்கள் என்றும் பனையூர் பாபு நினைவூட்டியுள்ளார். "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்ற அம்பேத்கரின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டியுள்ள அவர், இன்று விசிக அந்த அபாயகரமான திசையில்தான் பயணிக்கிறதோ என அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார். அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றி, குழப்பத்துடன் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது என்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், திருமாவளவனிடம் கற்றுக் கொண்ட கொள்கைகளில் இருந்து இம்மியளவும் பின்வாங்காமல், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான தனது பயணம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
