ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் மட்டுமின்றி வணிக சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து எரிபொருள் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை தினசரி மாற்றியமைக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தற்போது மேற்காசிய போர் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - விலை உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உச்சக்கட்டமாக இப்போர் நடைபெற்று வரும் நிலையில் ஈரான் வழியாக ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் பரிமாற்றம் நடக்கும் ஹார்மோஸ் நீரிணை பாதை மூடப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் முதலில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் கடுமையான நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு நிலைமையை சீராக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதிர்ச்சியளித்த பெட்ரோல், டீசல் விலை
இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலை கடந்த மே மாதத்தில் மிகப்பெரிய பொருளாதார அடியாக விழுந்தது. ரூ.100 முதல் ரூ.101 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் விலை மே 31ம் தேதிக்கு ரூ.107.76 ஆக உயர்ந்தது. அதேபோல் மே மாத தொடக்கத்தில் ரூ. 92.61 ஆக இருந்த டீசல் விலை, மாத கடைசியில் ரூ. 99.86 ஐ எட்டியது. இது வாகன ஓட்டிகள் இடையே மிகப்பெரிய அளவில் கலக்கத்தை உண்டாக்கியது.
ஜூன் மாதம் விலையேற்ற விபரம்
இப்படியான நிலையில் ஜூன் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வழக்கமாக வணிக சிலிண்டர் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடியை இறக்கும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையும் மாற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூ.11 காசுகள் உயர்ந்து ரூ.107.87க்கும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து ரூ.99.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனையாகிறது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்பதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
