தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், பொதுமக்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மின்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, சோலார் பேனல் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பெரிய அளவில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இதில் தவறிழைத்தவர்கள் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கடன் சுமை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை
தற்போதைய நிலவரப்படி மின்சாரத் துறை சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் தவித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன், மின் வாரியத்தில் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு முன்னதாக இந்தத் துறையை யார் நிர்வகித்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று மறைமுகமாக விமர்சித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்கப்பட மாட்டாது என்றும், அனைத்தும் நேர்மையான முறையில் நடக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் மட்டும், மற்ற துறைகளின் ஒப்பந்தப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளால் சுமார் 160 இடங்களில் முக்கிய பவர் கேபிள்கள் வெட்டப்பட்டுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இனிவரும் காலங்களில் மின்சார விநியோகத்தைச் சீராக வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்தடை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும், அதன் மீது உடனடியாகப் பாய்ந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் அளிக்கும் புகார்களுக்குத் தாமதமின்றி தீர்வு காண வேண்டும் எனத் துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான நிர்வாகமும் டெண்டர் முறையும்
மின் வாரியத்தில் முதலில் நிர்வாக ரீதியான குளறுபடிகளைச் சீரமைக்க வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமார், இனிமேல் டெண்டர் கோரும் நடைமுறைகளில் எந்தவிதமான மறைமுக உடன்பாடுகளோ அல்லது ரகசிய டீலிங்குகளோ நடைபெறாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த மின்துறையையும் வெளிப்படைத்தன்மையுடன் வழிநடத்தப் போவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
