ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவில் வசித்து வருபவர் 86 வயதான மாரியம்மாள். கணவரை இழந்த இவர், தனது மகன்கள் வெளியூரில் வசிப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாளை நோட்டமிட்ட கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர், அவர் தண்ணீர் எடுக்கச் சென்றபோது பின்தொடர்ந்து சென்று முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்துள்ளனர்.
கண் எரிச்சலால் நிலைகுலைந்த மாரியம்மாளைத் தாக்கி கீழே தள்ளிய அந்த கும்பல், அவர் மயக்கமடைந்ததும் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் மோதிரம் மற்றும் கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சோட்டையன் தோப்பைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, தாளமுத்து நகரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி மற்றும் கர்ணன் என்ற 25 வயது இளைஞர் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
நண்பர்களான இவர்கள் மூவரும் அந்த வழியாகச் சென்றபோது, மூதாட்டி தனியாக இருப்பதைப் பார்த்து திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்த போலீசார், தூத்துக்குடியில் உள்ள ஒரு அடகுக் கடையில் வைக்கப்பட்டிருந்த மாரியம்மாளின் நகைகளை மீட்டனர். கைதான கல்லூரி மாணவிகள் உட்பட மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
