இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் மறைவு தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நேர்மையான அரசியல் வாழ்க்கைக்குச் சான்றாக விளங்கும் ஒரு பழைய தேர்தல் காலச் சம்பவம் குறித்து பார்க்கலாம். பெரும் மதக்கலவரத்திற்குப் பிறகு கோவையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து நல்லகண்ணு போட்டியிட்டபோது நடந்த அந்த நிகழ்வு, அவரது சமரசமற்ற மதச்சார்பற்ற கொள்கையை உலகிற்குப் பறைசாற்றியது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்கள் தயாராக இருந்தபோது, கூட்டணியில் இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் கொடி மட்டும் அங்கு இல்லை. பெரும்பான்மை இந்துக்கள் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் செய்யும்போது, தங்கள் கட்சியின் கொடி இருந்தால் நல்லகண்ணுவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் பாதிக்கப்படலாம் என்ற நல்லெண்ணத்தில், முஸ்லிம் லீக் கட்சியினரே அக்கொடியைத் தவிர்க்க முடிவு செய்திருந்தனர். ஆனால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நல்லகண்ணு, "உங்கள் கொடி இல்லாமல் கிடைக்கும் வெற்றி எனக்குத் தேவையில்லை; முதலில் கொடியைக் கட்டுங்கள், நீங்களும் வாகனத்தில் ஏறுங்கள்" என்று உறுதியாகக் கூறி, அவர்களைச் சமமாக மதித்து அழைத்துச் சென்றார்.
அந்தத் தேர்தலில் நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார். ஆனால், ஒருபோதும் அந்தத் தோல்விக்காகவோ அல்லது தனது நிலைப்பாட்டிற்காகவோ அவர் வருந்தியதே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு விழாவில் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் நினைவுகூர்ந்த இந்தச் சம்பவம், தற்போது நல்லகண்ணுவின் மறைவுக்குப் பின் ஒரு உன்னத அரசியல் பாடமாகப் பேசப்பட்டு வருகிறது. பதவிக்காகவும் வெற்றிக்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரு மாபெரும் தலைவனைத் தமிழகம் இன்று இழந்து நிற்கிறது.
