AIADMK | தவெகவுக்கு தாவும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்.. EPSக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக!

4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
AIADMK | தவெகவுக்கு தாவும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்.. EPSக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக!

தவெகவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இணைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆளுநரை சந்தித்து மனு அளித்த நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக திமுக களமிறங்கியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக நிலைப்பாடு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உள்ள நிலையில் அவருக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் இருந்தது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த ஐந்து கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க அவர் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவு வலியுறுத்தியது. இதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கவே பிரச்சனை வெடித்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தனர்.

எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா - தவெகவில் இணைப்பு

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவிலிருந்து மரகதம் குமரவேல். ஜெயக்குமார். சத்யபாமா, மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறிய விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அதிமுக சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துமாறு தெரிவித்தது. மேலும் தங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதிமுகவுக்கு திமுக ஆதரவு

இந்த நிலையில் இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதற்கு காரணம் என்ன? .. சம்பந்தமே இல்லாமல் எப்படி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களால் மற்றொரு கட்சியில் இணைய முடியும்?.. இந்த விஷயத்தில் கட்சி மாறியதை தாண்டி ஏதோ ஒன்று பின்புறத்தில் உள்ளது என டி.கே.இளங்கோவன் தெரிவித்தார். அதனால் அதிமுகவினரின் சிபிஐ விசாரணை கோரிக்கை நியாயமானது என தெரிவித்தார்.

ஏற்கனவே தேர்தலுக்குப் பின்னர் திமுக - அதிமுக கூட்டணி வைக்க முற்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவாக திமுக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...