நடிகரை பார்த்து சென்ற மக்கள் நம்மிடம் மீண்டும் வருவார்கள் என திமுக இளைஞரணி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்து 2ம் இடம் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்து தோற்றது, 15க்கும் மேற்பட்ட கட்சிகளை வைத்து சரிவை சந்தித்தது, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வி, 15 அமைச்சர்கள் தோற்றது என இந்த தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
எனினும் 75 ஆண்டுகால இயக்கமான திமுக தோல்வியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் மேலிட தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை நிர்வாக அமைப்பை மாற்றவும் முடிவு செய்து அதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், “இந்த தோல்வி தற்காலிகமானது தான்” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக என்னும் பேரியக்கத்திற்கு இளைஞர்களே எதிர்காலம். நாம் சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். நம்முடைய திட்டத்தையும் செயலாக்கத்தையும் மேலும் மேம்படுத்துவோம். நம்முடைய தோல்விக்கு பெரும்பாலான மக்கள் வருத்தப்படுகின்றனர். தவெக ஆட்சி நிச்சயமாக 5 ஆண்டுகாலம் நடைபெறும் ஆட்சி அல்ல. சினிமா கவர்ச்சியில் அமைந்துள்ளது. புதிய பொம்மையை பார்த்தால் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தைக்கு 2 நாட்களில் போர் அடித்துவிடும். பொம்மை வேண்டுமென்பது போல் நடிகரை பார்த்து சென்ற மக்கள், தாயிடம் வருவதுபோல் நம்மிடம் வருவார்கள்” என கூறினார்.
மேலும் அடுத்த 50 ஆண்டுகள் இந்த இயக்கத்தை இயக்கப் போவது உங்களைப் போன்ற இளைஞர்கள் தான். இந்த தோல்வி தற்காலிகமானது தான். இதில் இருந்து தி.மு.க எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கும் என்பதை நாம் காட்ட வேண்டும். நாம் மீண்டும் வெல்வோம். எனவே ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடலை நிகழ்த்துங்கள். புதிய வரலாற்றை எழுதுவோம். உங்களைச் சந்திப்பது போல் வேறு மகிழ்ச்சி எனக்கில்லை. நான் வளர்ந்த இளைஞரணி, நான் வளர்த்த இளைஞரணி, என்னை வளர்த்த இளைஞரணி என சொல்லலாம்” எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
