தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், மக்கள் குறிப்பிடத்தக்க வாக்குகளை வழங்கியுள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். புதிய அரசு அமைவதற்குத் திமுக ஒருபோதும் இடையூறாக இருக்காது என்றும், மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகத் தனது கட்சி செயல்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அனைவருக்குமான அரசாகச் செயல்பட வேண்டுகோள்
புதிய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ள ஸ்டாலின், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான திட்டங்களைத் தொய்வின்றிச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இத்தகைய உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தால் மட்டுமே மாநிலம் வளம் பெறும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு இயங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அமையவிருக்கும் அரசுக்கு மீண்டும் ஒருமுறை தனது நல்வாழ்த்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.
