முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்புத் தரிசனம் மற்றும் விசேஷ வழிபாடுகளுக்கு வரும் பக்தர்களிடம் அர்ச்சகர்களும் ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அண்மையில் கூட போலி தரிசன டிக்கெட் விற்று லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், இன்று காலை யாருக்கும் அறிவிக்காமல் அதிரடியாகத் திருச்செந்தூர் கோயிலில் கள ஆய்வில் இறங்கினார். கோயில் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்குத் தகவல் கசிவதைத் தவிர்க்க, தனது காரைக் கோயில் வளாகத்திற்கு வெகு தூரத்திலேயே நிறுத்தினார். பின்னர் ஒரு சாதாரண பக்தரைப் போல டி-ஷர்ட் மற்றும் முகக்கவசம் (Mask) அணிந்து கொண்டு, தனது உதவியாளருடன் பொது மக்கள் வரிசையில் இணைந்தார்.
கூகுள் பே மூலம் சிக்கிய அர்ச்சகர்கள்
விரைவாகச் சாமி தரிசனம் செய்ய என்ன வழி என்று அமைச்சரின் உதவியாளர் அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரித்த போது வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல் அவர்கள் தங்களது சுயரூபத்தைக் காட்டினர். ஒரு நபருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் நான்கு பேருக்கு மொத்தம் 4,000 ரூபாய் கொடுத்தால், உடனடியாக விஐபி விசேஷ வழித்தடம் வழியாகக் கூட்டிச் செல்வதாகப் பேரம் பேசியுள்ளனர். தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று அமைச்சர் கூறியதை அடுத்து, அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தனது ஆன்லைன் கூகுள் பே (Google Pay) எண்ணை நீட்டியுள்ளார். அமைச்சர் உடனடியாக அந்த எண்ணுக்கு 4,000 ரூபாயை டிஜிட்டல் முறையில் அனுப்பினார். பணம் தங்களது கணக்கிற்கு வந்ததை அர்ச்சகர்கள் உறுதி செய்த அடுத்த நொடியே, அமைச்சர் ரமேஷ் தனது முகக்கவத்தைக் கழற்றி தான் யார் என்பதை அதிரடியாக வெளிப்படுத்தினார். பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் சான்றுகளுடன் அர்ச்சகர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததால் ஒட்டுமொத்த கோயில் வளாகமும் ஸ்தம்பித்தது. லஞ்ச ஊழலில் ஈடுபட்ட நபர்களைக் கோயில் அலுவலகத்திற்கு வரவழைத்த அமைச்சர், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கக் கடிதங்களை எழுதி வாங்கினார்.
அன்னதானக் கூட எச்சரிக்கையும் கடுமையான நடவடிக்கையும்
இந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் நேராகக் கோயிலின் அன்னதானக் கூடத்திற்குச் சென்று அங்குள்ள பக்தர்களோடு தரையில் அமர்ந்து உணவருந்தினார். அப்போது, அங்கு விநியோகிக்கப்படும் அன்னதான டிக்கெட்டுகளிலும் சில நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடப்பதைக் கண்டறிந்து, அங்கிருந்த ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்தார். மேலும், திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள், மாதாந்திர வருமானக் கணக்குகள் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாக நடைமுறைகளையும் அவர் முழுமையாக ஆய்வு செய்தார். அமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷனைப் பக்தர்கள் கைகூப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், இணையத்தில் பரவும் வதந்திகளை மறுத்ததோடு, தவறு செய்தவர்களிடம் மன்னிப்புக் கடிதம் அல்ல, சட்டப்படியான விளக்கக் கடிதமே கேட்கப்பட்டுள்ளது என்றார். கோயிலின் சொத்துக்கள் மற்றும் அன்னதான முறைகேடுகள் குறித்த முழுமையான ஆய்வு முடிவுகள் வெளியானவுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எவ்விதப் பாரபட்சமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
