நேற்று (பிப்ரவரி 10) வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக அமைச்சர் துரைமுருகன் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவ கண்காணிப்பு:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதுடன் தொடர்ந்து கண்காணிப்பிலும் வைத்துள்ளனர். அமைச்சரின் உடல்நிலை குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு விரைந்தார்.
அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். கடந்த ஆண்டு இறுதியிலும் இதேபோல் உடல்நலக் குறைவால் துரைமுருகன் சிகிச்சை பெற்றபோது, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் சிகிச்சை:
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், வயது முதிர்வு காரணமாக அண்மைக்காலமாக அடிக்கடி உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார். இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
