MDMK Vaiko | திமுகவுக்கு டாட்டா.. இரண்டு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? - அப்செட்டில் ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என வைகோ தெரிவித்தார். இதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே மதிமுக தேர்தலில் வெற்றி பெற்றது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
MDMK Vaiko | திமுகவுக்கு டாட்டா.. இரண்டு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? - அப்செட்டில் ஸ்டாலின்!

2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தங்களை கட்டாயப்படுத்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள கருத்து திமுக தலைவர் ஸ்டாலினை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் திமுக எதிர்க்கட்சியாக மாறியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய ஐந்து கட்சிகளும் பெரும்பான்மை இல்லாமல் தவித்த விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க அவர் முதலமைச்சராக அரியணை ஏறினார்.

அதேசமயம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்கு சென்று விஜய் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.

இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முதலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என வைகோ முடிவெடுத்த நிலையில், மு.க.ஸ்டாலின் அதனை மறுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் கட்சியின் அங்கீகாரம் பறிபோய்விடும் என்பதால் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என வைகோ தெரிவித்தார். இதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே மதிமுக தேர்தலில் வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பின்பு விஜய் தலைமையிலான அரசுக்கு திமுக கூட்டணியில் இருந்த பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் வைகோவால் ஆதரவு தெரிவிக்க முடியவில்லை. ஒருவேளை தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரது தலைமையிலான அமைச்சரவையில் மதிமுக இடம் பிடித்திருக்கும்.

இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இடம்பெற வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுகவா அல்லது தமிழக வெற்றிக் கழகமா என புரியாமல் மதிமுக புலம்பி வருகிறது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில் தங்கள் வசம் உள்ள இரண்டு எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் பங்கேற்கலாமா என வைகோ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

துரை வைகோவும், வைகோவும் உதயசூரியன் சின்னத்தில் கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்தார்கள் என தெரிவித்துள்ளதால் திமுகவுக்கு அவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...