காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை தோலுரித்து காட்ட சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சரமாரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தயவில் தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் எனவும், மற்ற கூட்டணி கட்சிகளை அதன் செயல்பாடுகளைப் பொறுத்து விமர்சனம் செய்ய அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. மேலும் ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர்.
அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார். 15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் . ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது வைக்கப்படுவது ஏன்?
ஏனெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது. மேலும், பாஜக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்?” என மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
