தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இரண்டு பிரிவுகளாக உடைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சின்னம் யாருக்கு? நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அன்புமணி தரப்பிற்கு 'மாம்பழம்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் "மாம்பழ சின்னம் சட்டப்படி எங்களுக்கே சொந்தம். நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே வரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகின்றன; விரைவில் ஒரு நற்செய்தி வெளியாகும்," எனத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குழப்பமும்... தொகுதிப் பங்கீடும்!
அன்புமணி தரப்பு பாஜக தலைமையிலான கூட்டணியில் நிலைபெற்றுள்ள நிலையில், டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனக் கருதப்படுகிறது.
ராமதாஸ் தரப்பு திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வருவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. ஆனால், திமுக தரப்பில் மிகக் குறைந்த அளவிலான தொகுதிகளே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றொரு முக்கியத் தகவலாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் இணைந்துவிட்டதாகவும், அவருக்கு சுமார் 17 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், தனது ஆதரவாளர்களுடன் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.மகன் ஒரு பக்கமும், தந்தை ஒரு பக்கமும் என பாமக பிளவுபட்டு நிற்பது அந்தத் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், டாக்டர் ராமதாஸின் அடுத்தகட்ட 'அதிரடி' அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
