மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். தங்கபாண்டி, கட்சிப் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.26 லட்சம் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரின் கணவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
புகார்தாரர் தனது மனைவிக்குக் கட்சியில் முக்கியப் பதவி பெற்றுத் தருவதற்காக, மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியிடம் ரூ.26 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நாட்களாகியும் பதவி பெற்றுத் தரவில்லை எனவும், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவி வழங்காமல் ஏமாற்றியது மட்டுமின்றி, பணத்தைத் திரும்பக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் மீது இத்தகைய பண மோசடிப் புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.