மதுரை பெருங்குடி ஆதிசிவன் நகரைச் சேர்ந்த 30 வயதான சிவபெருமாள், மனைவியைப் பிரிந்து தனது தாய் பொற்கொடியுடன் வசித்து வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான சிவபெருமாள், மது அருந்துவதற்காகத் தனது தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு நச்சரிப்பதையும், போதையில் வந்து வீட்டில் ரகளையில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனால் தாய் பொற்கொடி நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவும் வழக்கம் போல மது போதையில் வீடு திரும்பிய சிவபெருமாள், தனது தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு பின்னர் வீட்டிலேயே உறங்கியுள்ளார்.
அம்மிக்கல்லால் நேர்ந்த விபரீதம்
மகனின் தொடர் தொந்தரவால் ஆத்திரமும் மனவேதனையும் அடைந்த பொற்கொடி, தூங்கிக் கொண்டிருந்த சிவபெருமாளின் தலையில் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்துப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த சிவபெருமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிவபெருமாள் சடலமாகக் கிடக்க, அருகில் அவரது தாய் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாக்குமூலமும் சிறை தண்டனையும்
இந்தக் கொலை தொடர்பாகப் பொற்கொடியைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, "தினமும் குடித்துவிட்டு வந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாலும், அவர் செய்த கொடுமைகளைத் தாங்க முடியாமலும் மனவேதனையில் இந்தச் செயலைச் செய்துவிட்டேன்" என அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பொற்கொடி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். பெற்ற மகனையே தாய் கல்லால் அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
