மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தின் போது, சில சமூக விரோதிகள் பக்தர்கள் மீது காலணிகளை வீசி அநாகரிகமாக நடந்து கொள்வதைத் தடுக்கக் கோரி வழக்கறிஞர் சுந்தரவடிவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு இது போன்ற செயலால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் உருவானதையும், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இதனால் அவமரியாதை செய்யப்படுவதையும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மதுரையின் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம்
இத்தகைய அநாகரிகமான செயல்கள், விழாவைக் காண வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மதுரையைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்குவதாக மனுதாரர் வேதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை மற்றும் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி, பக்தர்கள் மீது காலணி வீசும் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் போது இது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிரடிப்படை போலீசார் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசுத் தரப்பில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
