விருதுநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை எடுத்துரைத்தார். அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி அதிக அளவில் செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால், பெற்றோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த குடும்பப் பிரச்சினையைத் தீர்க்கவே சிறுமி அவசர உதவி எண்ணான '1098'-ஐத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும், ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரிலேயே இந்த தவறான பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சிறுமிக்கு தரப்பட்ட அழுத்தம்
இந்த வழக்கின் விசாரணையின் போது சிறுமி அளித்த வாக்குமூலத்தை ஆராய்ந்த நீதிபதி, அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். தாய், தந்தை இடையே நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே சிறுமி '1098' எண்ணை அழைத்துள்ளார். ஆனால், அந்த அழைப்பை ஏற்ற அதிகாரி, தந்தைக்கு எதிராக அவர் 'மோசமாகத் தொட்டது' போன்ற புகாரைக் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், அந்த சிறுமியைக் காப்பகத்தில் ஐந்து நாட்கள் தங்க வைத்திருந்த போது, குழந்தைகள் நலக் குழு அதிகாரிகளும் அவரை மிரட்டி, தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துமாறு கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர் என்பது சிறுமியின் வாக்குமூலம் வழியே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீதிமன்றத்தின் கடுமையான வேதனை
குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளும் சிறுமிகளை, அவர்களின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது பாலியல் புகார் அளிக்குமாறு சில அதிகாரிகள் கட்டாயப்படுத்தும் இந்த ஆபத்தான போக்கு நீதிமன்றத்திற்குப் பெருத்த வேதனையை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். பெற்றோரின் சண்டையால் ஏற்பட்ட மன உளைச்சலைப் பகிர்ந்து கொள்ள வந்த சிறுமியிடம், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதுபோன்ற வழக்குகளில் '1098' உதவி மைய பணியாளர்கள், குழந்தைகள் நலக் குழுவினர், காப்பகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குச் முறையான வழிகாட்டுதல்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்
மனுதாரர் மீது பாலியல் புகார் கொடுக்குமாறு அவரது மகளைக் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் கட்டாயப்படுத்திய இந்த விவகாரம் குறித்துத் தென் மண்டல ஐஜி தீவிர விசாரணை நடத்தி, வரும் 2.7.2026-க்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தவறான குற்றச்சாட்டுக்கு உள்ளான தந்தைக்கும், மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகளுக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
