கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இதற்கான போராட்டங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதேபோல், அதிமுக ஆட்சியின் போதும் அப்போதைய அமைச்சர்கள் இதற்கான உறுதியை வழங்கியிருந்தனர்.
ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இரு முக்கியக் கட்சிகளும் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவிக்கும் 'கும்பகோணம் மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழு', வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராகத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் சத்தியநாராயணன் பேசுகையில், மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை மதிக்காத கட்சிகளுக்கு இந்தப் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.