தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர் மங்கலம் பகுதியில் இயங்கி வரும் முருகனுக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுமை வாகனத்திலிருந்து தீக்குச்சி மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வினால் தீப்பொறி கிளம்பி ஆலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் விஜயாபுரி கீழத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த சுடலைமுத்து ஆகிய இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடர்ந்த புகைமூட்டம் காரணமாக மீட்புப் பணியில் ஆரம்பத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலை கட்டடம் மற்றும் தீக்குச்சிகளை ஏற்றி வந்த வாகனம் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் செ.ராஜூ, பட்டாசு ஆலைகளைப் போலவே தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் விபத்துகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தீப்பெட்டி தொழிலாளர் நலவாரியம் தற்போது முறையாகச் செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அவர் விமர்சித்தார். மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்திற்குத் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொழிலாளர் நலவாரியம் மூலமாகவும் உரிய நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
