தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த ரகசியப் பட்டாசு தயாரிப்பு கூடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் உள்ள காட்டுப்பகுதியில், தனியாருக்குச் சொந்தமான ஒரு கோயிலின் அருகே உள்ள கட்டிடத்தில் இந்த விதிமீறல் ஆலை செயல்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் வீரியத்தால் சம்பந்தப்பட்ட கட்டிடம் தரைமட்டமாக இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி (25) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
மீட்பு நடவடிக்கையும் போலீஸ் விசாரணையும்
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட மாலதி மற்றும் ஐயப்பனின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படுகாயமடைந்த சூரியபிரகாசுக்குக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இக்கோர விபத்து குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாகப் புளியங்குளத்தைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி மற்றும் கட்டிட உரிமையாளர் குருநாதன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
