தமிழர்களின் பழமையான நாகரீகமான கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது நமது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் கீழடி அறிக்கையையும் ஒன்றிய அரசை வெளியிட வைப்போம் என்று கூறியுள்ளார் .
2600 ஆண்டுகள் பழமையான கீழடி குறித்த ஆராய்ச்சி தமிழர்களின் நாகரிக வளத்தை உலகிற்கு எடுத்து காட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் மதுரைக்கு அருகில் அமைந்துள்ள கீழடியில் இதுவரை மேற்கொண்ட தொல்லியல் துறை பல அரியப் பொருட்களை கண்டறிந்துள்ளன.
கீழடி அகழ்வாராய்ச்சி கடந்து வந்த பாதை
தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் இந்த காலகட்டங்களிலும் தொல்லியல் துறையில் நமது பழங்கால வாழ்க்கை முறையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வரலாற்று மிக்க கீழடியில் முந்தைய கால மக்களின் நாகரிகங்களை வெளிக்கொணரும் பல பொருட்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இங்கு தமிழக தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டது . அந்த கீழடி அகழ்வாய்வில் 2014 -15, 2015 - 16, 2016 - 17 மற்றும் 2018-19 -இல் ஆய்வுகள் மேற்கொண்டப்பட்டன. இந்த ஆய்வுகளின் போது அரும்பெரும் பொருட்கள், தொல்பொருட்கள் என்று பல கிடைத்துள்ளன. 2018-19-இல் ஐந்தாம் கட்ட தொல்லியல் அகழ்வாய்வு நடைபெற்றது. நான்காம் கட்ட அகழ்வாய்வில் 5820 தொல்பொருட்கள் கிடைத்தன. இவை பண்டைய மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களுடைய நாகரிகமும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் உலகிற்கு தமிழர்களின் பெருமையை கொண்டு சேர்த்தன. பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையிலான செங்கல் கட்டுமான பொருட்கள், சுடுமண் உரைகிணறுகள் மேலும் பல அறிய கட்டுமான பொருட்களும் இங்கு காணப்பட்டன. மேலும் விலையுயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செம்புப் பொருட்கள், கண்ணாடி பாகங்கள், சுடுமண் செங்கொட்டான் காய்கள், வட்ட சில்லுகள் மிக விலையுயர்ந்த மணிக்கற்கள் போன்றவை கிடைத்தன. மேலும் இப்பொருட்களை ஆராய்ந்ததில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையில் பயன்படுத்தப் பட்டவை என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். இப்பொருட்களின் வாயிலாக பண்டைய காலத்தில் தமிழர் நாகரீகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததை உலகிற்கு எடுத்துகாட்டினார் . பண்டைய தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு வளத்தை கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை கொண்டு உலகிற்கு எடுத்து காண்பிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி
பல மாதங்களாக அடுத்தகட்ட ஆய்விற்கு அனுமதி கேட்டுவந்த நிலையில் தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நமது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கீழடி குறித்த அறிக்கையை மத்திய அரசை வெளியிட வைப்போம் என்றும் கூறியுள்ளார். இதற்கான நிதியை 2025-2026 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கீழடி மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர், தென்காசி மாவட்டத்தின் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டத்தின் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், கோவை மாவட்டத்தின் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தின் தெலுங்குனூர்-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளபட உள்ளன.
