கரூரில் பரபரப்பு: விஜய் படம் அருகே ஸ்டாலின் படம்... சுத்தியலோடு மேடையேறி அதிமுக கவுன்சிலர்கள் ரகளை!

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் முதலமைச்சர் விஜய் படம் அருகே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் காமராஜர் படங்களை வைக்கக் கோரி அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சுத்தியலுடன் மேடையேறிப் போராட்டம் நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

M

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
கரூரில் பரபரப்பு: விஜய் படம் அருகே ஸ்டாலின் படம்... சுத்தியலோடு மேடையேறி அதிமுக கவுன்சிலர்கள் ரகளை!

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது தலைவர்களின் படங்களையும் அங்கு வைக்கக் கோரி அவர்கள் நடத்திய அதிரடிப் போராட்டம் மற்றும் வாக்குவாதம் காரணமாக மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

திடீரென முளைத்த ஸ்டாலின் படம்

கரூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், இன்று முற்பகல் 11.30 மணியளவில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கவிதா தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் எம்.பிரித்விராஜ், துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சியின் 1-வது மண்டலக்குழுத் தலைவரான திமுகவின் சக்திவேல், திடீரென முதலமைச்சர் விஜய் படத்தின் அருகே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை மாட்டினார். மேலும், தனது இருக்கைக்கு அருகில் உள்ள மேஜையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோரின் படங்களையும் கொண்டு வந்து வைத்தார்.

சுத்தியலுடன் மேடையேறிய அதிமுக

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் தொடங்கிய உடனேயே, அங்கிருந்த அதிமுக கவுன்சிலர்களான தினேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருப்பதால், தங்களது தலைவர் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் படத்தையும் மாட்ட வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதுமட்டுமன்றி, பழனிசாமியின் புகைப்படம் மற்றும் அதனை மாட்டுவதற்கான சுத்தியலுடன் அவர்கள் அதிரடியாக மாநகராட்சி கூட்ட மேடை மீது ஏறினர். அவர்களை திமுக மண்டலக்குழு தலைவர் சக்திவேல் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு இருதரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

காமராஜர் படத்துடன் காங்கிரஸ்

இந்த அமளிக்கு இடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்துடன் மேடைக்கு வந்து, இங்குக் காமராஜர் படத்தையும் வைக்க வேண்டும் என்று ஆவேசமாக வலியுறுத்தினார். வழக்கம் போல இதற்கும் திமுக கவுன்சிலர்கள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் தொடர் மோதலால் அதிருப்தியடைந்த மேயர் கவிதா, கவுன்சிலர்கள் அனைவரும் உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்காவிட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னரே அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றனர்.

வாக்கெடுப்பும் மேயரின் ஆலோசனையும்

இதனையடுத்து, மாநகராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கைகளை உயர்த்தலாம் என்று மேயர் கூறியபோது, அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவு அளித்தனர். தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி படத்தை வைப்பதற்கான ஆதரவு குறித்துக் கேட்க முற்பட்ட போது, அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரத்தில் எவ்வித வாக்கெடுப்பும் நடத்தக் கூடாது என அமளியில் ஈடுபட்டனர். நிலைமை சீர்கெட்டதால், மேயர் கவிதா கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மாநகராட்சி ஆணையர் எம்.பிரித்விராஜுடன் அவரது அறையில் சிறிது நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆலோசனைக்குப் பிறகு மாநகராட்சி கூட்டம் மீண்டும் சுமுகமாகத் தொடங்கியது. சாதாரண கூட்டத்திற்கான தீர்மானங்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டன. இதில் விவாதத்திற்குரிய முதல் தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, மற்ற 17 முக்கியத் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதேபோல், அதன் பின்னர் நடைபெற்ற அவசரக்கூட்டத்திலும் கொண்டு வரப்பட்ட 10 தீர்மானங்களும் முறைப்படி நிறைவேற்றி வைக்கப்பட்டன.

வார்டு பிரச்சினைகளை எழுப்பிய கவுன்சிலர்கள்

அவசரக்கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட மனை பிரிவு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர் சுரேஷ் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் நேரத்தில் தனது வார்டு பகுதியில் தொடங்கப்பட்ட சாலை மற்றும் சாக்கடை கட்டும் பணிகள் தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு கட்டப்பட்டுள்ள கல்வெர்ட் பாலங்கள் வழக்கத்தை விட அதிக உயரமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாய் தொல்லை குறித்துப் புகார்

இதனைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி, தனது 41-வது வார்டு பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டதாகப் புகார் கூறினார். குறிப்பாக இரவு நேரங்களில் 20 முதல் 30 நாய்கள் கூட்டமாக உலா வருவதால் பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிவிட்டதால், சிறு குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்பும்போது இந்த நாய்களைக் கண்டு மிரளுவதாகவும், எனவே இதைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். அதற்குப் பதிலளித்த மாநகராட்சி அதிகாரி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாய் தொல்லையைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...