கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான வேலு மற்றும் மாரிஸ்வரி தம்பதியினரின் நான்கு வயது மகன் சஞ்சீவி, நேற்று மாலை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே கார் கவரால் மூடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் ஏறிய சிறுவன், எதிர்பாராத விதமாக கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் உள்ளேயே சிக்கிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் மகனைக் காணாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், சந்தேகத்தின் பேரில் காரின் கவரை நீக்கிப் பார்த்தபோது சஞ்சீவி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தோகைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்காகச் சிறுவனின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீதத்தால் உறவினர்களும் கிராம மக்களும் கண்ணீர் மல்க சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
